மனிதர்கள் உயிர்வாழ உடல் உறுப்புகளை தானம் செய்த 109 பேர்; 642 பேருக்கு மறுவாழ்வு..!
மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என்றார்.
இதன் காரணமாக, உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.
“உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
“அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 170 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
“கடந்த 2023-ல் 178 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்றார் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன்.
நடப்பாண்டில் மூளைச்சாவு அடைந்த 109 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்றும் அவர்களில், 66 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் மூளைச் சாவு அடைந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.