வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
புதுசேரியில், சாலை பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்ட சபை வளாகத்தில் நடந்தது.அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் அருண், கேசவன், முத்தம்மா, ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், உள்ளாட்சித் துறை இயக்குநர் ரவிதீப் சிங் சஹார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், புதுச்சேரியில் சாலை விபத்துகளை தவிர்ப்பது மற்றும் குறைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இதில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன்பிறகு கட்டாயமாக ஹெல்மெட் அணிய செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
நகர பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் வேகமாக செல்ல வாய்ப்பில்லை. அதே நேரத்தில், விழுப்புரம், கடலூர், இ.சி.ஆர். உள்ளி்ட்ட நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டிகள் அசுர வேகத்தில் பறக்கின்றனர். எனவே, முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் செல்லும் பைக் ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
மோட்டார் வாகன சட்டப்படி, இருசக்கர வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் இருப்பதால், இதுகுறித்து மாநில அரசு புதிதாக ஏதும் உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. எனவே, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போதிய கால அவகாசம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு, அதன் பிறகு படிப்படியாக போலீஸ் நடவடிக்கையை அமல்படுத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான கால அவகாசம் குறித்து முதல்வரிடம் போக்குவரத்து போலீசார் கலந்து ஆலோசிக்க உள்ளனர். அதன்பிறகு களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர். எனவே, மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.
சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தின் முடிவின்படி, பைக் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதை அமல்படுத்தவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.