1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மிக விரைவில் ஒரே நாளில் 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்: அமைச்சர் தகவல்..!

1

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 

கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஒரு வருடத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ. 699 ஆக இருந்தது. இந்த ஆட்சியில் ரூ. 849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

அந்த வகையில் காப்பீட்டு திட்டம் என்பது பெரிய அளவில் பயன்பாட்டில் இருக்கின்றது. அதே போல் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெரிய அளவில் இன்னொரு சிறப்பான திட்டமும் உள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தின் படி, 2021 டிசம்பர் 18-ம் தேதி தமிழக முதல்வரால், மேல்மருவத்தூர் மருத்துவ கல்லூரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக அவர்களை காக்கும் பொருட்டு, முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் தரும் வகையில் அந்தத் திட்டம் அப்போது தொடங்கி வைக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் இதுவரை பயன்பெற்றுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை 1,81,860 பேர், இதன் மூலம் அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் செலவழிக்கப்பட்டுள்ள தொகை ரூ.159.48 கோடி ஆகும். 

இதில் 237 அரசு மருத்துவமனைகளிலும், 455  தனியார் மருத்துவமனைகளிலும் ஒட்டு மொத்தமாக 692 மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் இருக்கின்றது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டும் அமைப்பாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் விடுபட்டு போகக் கூடாது என்கின்ற வகையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. மிக விரைவில் தமிழகத்தில் 100 தொகுதிகளில் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like