100 யூனிட் இலவச மின்சாரம் வேணுமா..?: அப்போ, உடனே இதை செய்யுங்க..!
100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில், அரசு வழங்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் நிறுவனங்களும் ஆதாரை கட்டாயப்படுத்தி வருகின்றது. வங்கி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலம் சார்ந்த தேவைகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிம்கார்டு வாங்குவது முதல் ரீசார்ஜ் வரை ஆதார் எண் முக்கியம் என்ற நிலை உருவாகிவிட்டது. மேலும், வீடுகளில் இருந்தபடியே அரசு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் முக்கியமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசு தற்போது நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கான வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது இணையதளத்தில் அமைத்திருக்கிறது. 100 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் பெற்று வருபவர்கள் தங்கள் ஆதார் எண்ணை தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையதளம் மூலமாக இணைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைப்பில் ஆதார் அப்டேட் என்ற பிரிவில் சென்று நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம். இதன் மூலம், 100 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து மானியம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.