தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!! உங்க மாவட்டம் இருக்கா?
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பக் காற்று மற்றும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இம்மாத இறுதி மற்றும் ஏப்ரல் முதல் வாரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, புயல் சுழற்சி உள்ளிட்டவைகளால் அடுத்த சில நாட்களுக்கு இதமான தட்பவெட்ப சூழல் தரும் மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த புயல் சுழற்சியானது தென்மேற்கு ராஜஸ்தானுக்கு மேல் உள்ளது. எனவே, அடுத்த சில தினங்களுக்கு பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல, மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுவை, கேரளா, மாஹே மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை காரணமாக, வடக்கு, மத்திய மற்றும் தீபகற்ப மாநிலங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட குறைவாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை இன்று கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.