1. Home
  2. தமிழ்நாடு

10-ம் வகுப்பு மற்றும் +1 தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் அறிவிப்பு..!!


தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல, 11ஆம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகி இருந்தது. இந்நிலையில் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., மார்ச் மற்றும் ஏப்ரல் 2023ல் நடைபெற்ற 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 வெள்ளிக்கிழமையன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 19.05.2023 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளை அன்று பிற்பகல் 2 மணிக்கும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like