1. Home
  2. தமிழ்நாடு

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி: தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தொழிலாளர் நலத்துறையின் கடந்த 2021 - 2022-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்கப்படும்.


வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், ஆண்டுதோறும் பதிவு பெற்ற 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை வீட்டுவசதித் திட்ட நிதி உதவித்தொகை வழங்கும் வகையில், ரூ.400 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.அதன் அடையாளமாக, 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கினார்.

கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை வாரியத்தில் 4,27,176 பயனாளிகளுக்கு ரூ.322.79 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வாரியத்தில் புதிதாக 7,71,666 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like