1. Home
  2. தமிழ்நாடு

10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலிக்காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பிரதமர் மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஸ்கார் மேளா திட்டத்தை நாளை (22-ம் தேதி) காலை 11 மணிக்கு காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுகிற 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறார்.


பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும். இது தொடர்பாக பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவின்பேரில், எல்லா அமைச்சகங்களும், துறைகளும் அனுமதிக்கப்பட்ட பணி நியமனங்களுக்கு நிகராக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் தீவிரமாக செயல்படுகின்றனர்.

நாடு முழுவதும் புதிதாக வேலைக்கு எடுக்கப்படுகிறவர்கள் மத்திய அரசின் 38 அமைச்சகங்களிலும், துறைகளிலும் பணியமர்த்தப்படுவர். அவர்கள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என பல்வேறு மட்டங்களில் பணிபுரிவார்கள். மத்திய ஆயுதப்படை போலீஸ், சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், குமாஸ்தாக்கள் (எல்டிசி), சுருக்கெழுத்தர் (ஸ்டெனோ), நேர்முக உதவியாளர் (பிஏ), வருமான வரி ஆய்வாளர்கள், பல்பணி ஊழியர்கள் (எம்டிஎஸ்) என பல்வேறு பணிகளுக்கு இந்த நியமனங்கள் செய்யப்படுகின்றன.


யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே பணியாளர் வாரியம் என பணி நியமன ஆள் தேர்வு செய்யும் பல்வேறு அமைப்புகள் மூலம் இந்த பணி நியமனம் செய்யப்படுகிறது. விரைவான பணி நியமனத்துக்காக தேர்வுமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like