1 கிலோ மாம்பழம் ரூ1 லட்சம்; நடிகர் அருண்பாண்டியன் தோட்டத்து மாம்பழத்துல அப்படி என்ன ஸ்பெஷல்…??

சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அருண்பாண்டியன்.தொடர்ந்து, ஊமை விழிகள், இணைந்த கைகள், ஊழியன், தாயகம், உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்திருந்த அருண்பாண்டியன், வீரநடை, ரிஷி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும், அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், 2002-ம் ஆண்டு வெளியான தேவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்த அருண்பாண்டியன், அடுத்து விகடன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
2010-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் விருதகிரி என்ற படத்தில் நடித்திருந்த அருண்பாண்டியன் அதன்பிறகு 2 படங்களில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார், 2021-ம் ஆண்டு வெளியான அன்பிற்கினியாள் என்ற படத்தை தயாரித்து தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட அருண்பாண்டியன் அடிப்படையில் ஒரு ஆர்கானிக் விவசாயி ஆவார்.
சென்னையில் தனது தொழில்களை கவனித்து வந்தாலும், மாதத்தில் 10 நாட்கள், ஊருக்கு சென்று தனது சொந்த கிராமத்தில், தனது தந்தையுடன் இருக்கும் அருண்பாண்டியன், தொழில் இருப்பதால் சென்னையில் இருக்கிறேன். இல்லை என்றால், நான் கிராமத்திலேயே தங்கிவிடுவென் என்று கூறியுள்ளார். அதேபோல் மிகாஸகி என்ற ஜப்பான் நாட்டு மாம்பழம் தனது தோட்டத்தில் இருப்பதாகவும், அந்த மாம்பழத்தின் ஒரு கிலோ விலை ரூ 1 லட்சம் என்றும், சமீபத்தில் தான் அதை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறோம். என்னுடைய அப்பாவுக்கு 95 வயதாகிறது. இதுவரை தொட்டத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பா கூட அவர் பயன்படுத்தியது இல்லை என்று அருண்பாண்டியன் சொல்ல, அவரது மகள் கவிதா பாண்டியன், அப்பா வீட்டுக்கு வந்தாலே, காலை 5.45 மணி முதல் தோட்டத்திலே தான் இருப்பார். அவர் அங்கேயே அதிக வேலை செய்வார் என்று கூறியுள்ளார். அருண்பாண்டியன் தான் ஊரில் இல்லாத நேரங்களில் தனது தங்கை தான் தோட்டத்தை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.