1 கோடி கடன் வழங்கும் காக்கும் கரங்கள் திட்டம்!
தாய் நாட்டிற்காக தங்களது இளம்வயது முழுவதையும் ராணுவ சேவையில் கழித்த முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடந்த வருடம் தமிழக அரசு அறிமுகப்படுத்திய திட்டம்தான், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் (Mudhalvarin Kakkum Karangal Scheme).
இந்த திட்டத்தின் மூலம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.. அதாவது 30 சதவீதம் அசல் மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். ஓய்வுபெற்ற ராணுவ படையினரை தொழில் முனைவோராக உருவாக்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பும் செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வருமான வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஆனால், முன்னாள் படைவீரர்களின் அதிகபட்ச வயது 55 இருக்க வேண்டும்.. திருமணமாகாத மகள், மகன் மற்றும் கணவனை இழந்த மகளின் குறைந்தபட்ச வயது 25 இருக்க வேண்டும்.. முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்களின் குறைந்த பட்ச வயது 21, அதிகபட்ச வயது 55 ஆகும்.
முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள் (மனைவி), படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள் (மனைவி), முன்னாள் படைவீரரின் திருமணம் ஆகாத மகள், விதவை மகள், முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகன் ஆகியோர் இந்த திட்டத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
காக்கும் கரங்கள் திட்டத்தின் மானியத்தை பெறவும், கடனுதவிக்கு விண்ணப்பிக்கவும், சில ஆவணங்கள் தேவையாக உள்ளன.. குறிப்பாக, முன்னாள் படைவீரர் / விதவை / சார்ந்தோர் அடையாள அட்டை பகுதி II ஆணை, படைவிலகல் சான்றிதழ், 10, 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வட்டாட்சியரிடமிருந்து பெற்ற வேலையின்மைச் சான்றிதழ், நில ஆவணங்கள், திட்ட அறிக்கை, வாடகை / குத்தகை ஒப்பந்தம் / உரிமை ஆவணம் போன்றவை தேவைப்படும்.
இத்திட்டத்தில் இணைய http://exwel.tn.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்யலாம்..