1. Home
  2. தமிழ்நாடு

ஆண்டுக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை: அமைச்சர் சி.வே.கணேசன் உறுதி..!

ஆண்டுக்கு 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை: அமைச்சர் சி.வே.கணேசன் உறுதி..!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதல்வர் பெற்றுத் தருவார் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தின் (எஸ்.ஐ.டி.) கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- "தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் 1 லட்சமாவது பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ம் தேதி திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இதுபோல் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதல்வர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.


இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒட்டு மொத்தமாக தமிழக வரலாற்றில் 93.79 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. குறிப்பாக 51 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியங்களில் ஆய்வு செய்ததில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்தது.

அதை ஆய்வு செய்து, சென்னையில் ஒரேநாளில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதுவரை 4.5 லட்சம் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் வழங்கி இருக்கிறார்" என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like