1 மணி நேரம் காலதாமதமாக தொடங்கிய குடியரசு தினவிழா - மன்னிப்பு கோரிய ஆளுநர்..!!
தெலங்கானா மாநில கவர்னராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை கவர்னராக உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலத்தில் கவர்னர் தமிழிசை தேசியக் கொடியேற்றினார்.
தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் தனி விமானம் மூலம் புதுவைக்கு வந்து காலை 9.30 மணியளவில் புதுவை கடற்கரை சாலையில் தேசியக்கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவர்னர் தமிழிசை தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரி வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் 9.30 மணிக்கு தொடங்கவிருந்த விழா 10.30 மணிக்கு தொடங்கியது. இதனால் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் விழாவில் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி, பரிசு பெற வந்தவர்களும், விழாவை பார்வையிட வந்த பெற்றோர்களும், பொதுமக்களும் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என அனைவரும் காத்திருந்தனர். இதுபற்றி தமிழிசை கூறுகையில், "குடியரசு தினவிழாவில் பங்கேற்று 8.06க்கு தெலங்கானாவில் இருந்து கிளம்பினேன். 9.06க்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வானிலை அனுமதியில்லாததால் வானில் சுற்றிக் கொண்டிருந்தோம். தாமதத்திற்கு நான் காரணமில்லை என்றாலும்கூட, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
யாரையும் காக்க வைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. சிறு குழந்தைகள் இருப்பதை பற்றி எனக்கு தெரியும். எதிர்பாராத விதமாகவும் சில சம்பவங்கள் நடைபெறும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டார்.