சிறப்பு ரயிலில் ஓசூர் வந்த 860 இளம் பெண்கள்.. எதற்காக தெரியுமா..?
ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்ற ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 860 இளம் பெண்கள் அழைத்து வரப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' என்ற செல்போன் உதிரி பாகங்கள் தயார் செய்யும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக, பிளஸ் 2 படித்த உள்ளூர் மற்றும் வெளியூர் இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது வட மாநில இளம் பெண்களும் வேலைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் ஹடியா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் மொத்தம் உள்ள 20 பெட்டிகளில், 10 பெட்டிகளில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 860 இளம் பெண்கள் அழைத்து வரப்பட்டனர்.
ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்த இந்த பெண்களை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகத்தினர் தனியார் பேருந்துகள் மூலம் அழைத்துச் சென்று விடுதிகளில் தங்க வைத்தனர். இவர்கள அனைவரும் நாளை (அக்.1-ம் தேதி) முதல்'டாடா எலக்ட்ரானிக்ஸ்' கம்பெனிக்கு பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.