1. Home
  2. தமிழ்நாடு

இந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு..!!

இந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு..!!

'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் அல்லது கவர்னர்கள், மத்திய அமைச்சர் பதவியில் உள்ள உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர.

இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட 8 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழகம், கேரளா, டெல்லி, பஞ்சாப், கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் மற்றும் மே.வங்க முதல்வர்கள் இந்த நிதிஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொள்ளாததற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் சமீபத்திய அவசரச் சட்டம் காரணமாக கூட்டத்தை புறக்கணிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல, பஞ்சாபின் நலன்களில் கவனம் செலுத்தவில்லை எனக்கூறி கூட்டத்தை புறக்கணிப்பதாக அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். வெளிநாடு பயணம் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like