சென்னை மக்கள் கவனத்திற்கு.. அவசர உதவி எண் அறிவித்துள்ளது மாநகராட்சி..!
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது. மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ள இது, நாளை (டிச. 9-ம் தேதி) காலை வரை தீவிர புயலாக இருக்கும். அதன்பின் படிப்படியாக வலுப்பெறும். இந்த நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, சென்னை மெரீனா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு 1913 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 169 நிவாரண முகாம்கள் தயாராக இருக்கின்றது என தெரிவித்துள்ளது.