யோகாவில் 70 உலக சாதனை.. நெல்லை மாணவிக்கு பாராட்டு விழா..!

யோகாவில் 70 உலக சாதனை.. நெல்லை மாணவிக்கு பாராட்டு விழா..!
X

திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் - தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா. பாளையங்கோட்டை மீனா சங்கர் வித்யாலயாவில் 8ம் வகுப்பு பயிலும் இவர், யோகா மீது இருந்த ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே பல்வேறு யோகாசனங்களை பயிற்சி செய்து வருகிறார்.

அதன் பலனாக, இதுவரை 70 உலக சாதனைகள் புரிந்திருக்கிறார். மேலும், ‘உலகின் முதல் இளம் வயது யோகா ஆசிரியர்’ என்ற பட்டத்தை மத்திய அரசின் என்.சி.பி.சி.ஆர் இவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. அதேபோல், நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம், இந்தியன் எம்பயர் பல்கலைக்கழகம் போன்றவை இவருக்கு ‘உலகின் முதல் இளம் கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கியுள்ளது.


அத்துடன் இவர், நெல்லையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி, முதியோர் இல்லம், காவல்துறையினர், என்சிசி மாணவர்கள், எய்ட்ஸ் ஹோம் என பல்வேறு தரப்பினருக்கு இலவச யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும் உலகெங்கிலும் யோகா பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறார். யோகா ராணி, லிட்டில் யோகா ஸ்டார், யோக ரத்னா யோகா கலா ஸ்ரீ போன்ற பல்வேறு பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணைக் கட்டிக் கொண்டு எதிரில் இருப்பவற்றை துல்லியமாகச் சொல்வது இவரது தனித்திறமை. கண்ணைக் கட்டிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி அதிலும் உலக சாதனை படைத்துள்ளார். ‘யோகா இன்றே செய்வோம்- இன்பம் பெறுவோம்’ என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது.


இந்நிலையில், யோகாவில் சாதனை படைத்துவரும் மாணவி பிரிஷாவை கவுரவிக்கும் விதமாக நெல்லை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அறக்கட்டளை நிறுவன தலைவர் குணசேகர் அரிய முத்து, மாணவி பிரிஷாவுக்கு பொன்னாடை போர்த்தி, கேடயம், மரக்கன்றுகள், புத்தகங்கள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பென்ஸ் நிறுவன இயக்குநர் ரபீந்தர சைலபதி, பாஜக கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் கெல்லிஸ் பா.அருமை துரை, லயன். அருண் இளங்கோ, பாஜக திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை, ஆல்வின் முருகேஷ் மற்றும் சுப்பிரமணியன், மாரிமுத்து, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story
Share it