மருத்து உலகை மிரள வைத்த இந்திய மருத்துவர்கள்!! வயிற்றுக்குள் இருந்த 7 மாத சிசுவுக்கு இதய ஆபரேஷன்..!!

மருத்து உலகை மிரள வைத்த இந்திய மருத்துவர்கள்!! வயிற்றுக்குள் இருந்த 7 மாத சிசுவுக்கு இதய ஆபரேஷன்..!!
X

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதுள்ள ஒரு பெண் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே 2 முறை கருச்சிதைவு, ஒரு முறை பிறந்த குழந்தை இறப்பு என துயரத்தில் துடித்த பெண், இம்முறை குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினார். அதனால் இந்த முறை குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண்ணின் வயிற்றுக்குள் குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தையின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது குழந்தையின் இதய வால்வு ஒன்று சுருங்கி அதனால் இதயத்திற்குள் ரத்தம் சீராக செல்ல முடியாமல் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. அந்த சிசுவின் இதயத்தில் இருக்கும் குறையை சரி செய்வதற்காக இதய நோய் நிபுணர்கள், இதய மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் ஆபத்தான கர்ப்ப காலத்தை கையாளும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.அந்தக் குழுவினர் முழுமையான பரிசோதனைகள் செய்த பிறகு குழந்தைக்கு வயிற்றுக்குள்ளேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதல் உதவியுடன், தாயின் வயிறு வழியாக நுண்ணிய குழாயை செலுத்தி சிசுவின் இதயத்திற்குள் ஒரு சிறிய ஊசியை பொருத்தி இதய வால்வை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கியிருக்கிறார்கள். இந்த நுண்ணிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயும் அவரின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கர்ப்பிணி தாயும், சிசுவும் முழுமையான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற இதயக் கோளாறுகள் சில குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போதே ஏற்படலாம் எனவும், சிசுவாக வயிற்றுகுள் இருக்கும்போதே அந்தக் குறையை கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் குழந்தை பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப் போல பிறக்க வாய்ப்பு இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படியே இந்த சிசுவிற்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுருங்கியிருந்த சிசுவின் இதயம் பலூன் டைலேசன் முறைப்படி விரிவடையச் செய்வதற்கான மருத்துவ முயற்சி இது என்றும், இந்த சிகிச்சை மிக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சையால் சிசுவின் இதயம் சீரான ரத்த ஓட்டத்தை பெறும் என தாங்கள் நம்புவதாகவும், குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மிகவும் சிக்கலான இந்த இதய அறுவையை சிகிச்சையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மிகவும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மேலும், இந்த நுண்ணிய அறுவை சிகிச்சையை வெறும் 90 நொடிகளில் மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்தனர். அரசு மருத்துவமனை ஒன்றில் இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சையை செய்தது இதுவே முதல் முறையாகும். இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Next Story
Share it