அதிகாலை சோகம்.. தீபத் திருவிழாவிற்கு சென்று திரும்பிய 6 பேர் உடல் நசுங்கி பலி..!
மதுராந்தகம் அருகே, லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில், திருவண்ணமாலை தீப திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனம் ஒன்று சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில், திருவண்ணமாலை தீபத் திருவிழாவிற்கு சென்று விட்டு 15 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த வாகனம், மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில் வந்த போது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது, பின்னால் வந்த கனரக வாகனம், டாடா ஏஸ் மீது மோதியது. இதில், இரண்டு வாகனங்களுக்கும் இடையே சிக்கி டாடா ஏஸ் வாகனம் நொறுங்கியதில் அதில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரும், சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவ சந்திரசேகர் (70), தாமோதரன் (28), சசிகுமார் (35), சேகர் (55), ஏழுமலை (65), கோகுல் (33) என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.