சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மே 6-ம் தேதி வரை அனுமதி..!!
விருதுநகர் மாவட்டம்- மதுரை மாவட்டம் எல்லைப் பகுதியில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் வரும் 6-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையும் கோயில் நிர்வாகமும் அனுமதியளித்துள்ளன.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் இரவில் மலைப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை என வனத் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணிக்குள் பக்தர்கள் அனைவரும் மலையிலிருந்து கீழ இறங்கவும், தற்போது இந்தப் பகுதி மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இரவில் தங்க அனுமதி இல்லை என வனத் துறையினர் அறிவுறுத்தினர். அதோடு, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் திடீர் மழை பெய்தால் காட்டாறுகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மழை பெய்தால் பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத் துறையினர் கூறியுள்ளனர்.