பாஜக மகளிர் அணி புகார்.. திமுக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
பாஜகவின் பெண் நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு, ட்விட்டரிலேயே மன்னிப்பு கேட்டார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி. இந்நிலையில், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிர் அணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.