இந்தாண்டு உதகை மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது..!!
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
மலர் மற்றும் பழ கண்காட்சி குழுவில் தோட்டக் கலைத் துறை இயக்குநர் மற்றும் குழுத் தலைவர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழு உப தலைவர், நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் மற்றும் குழு செயலாளர், அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் குழு இணை செயலாளர், திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் முக்கிய உறுப்பினர்களைக் கொண்டு இம்மலர் மற்றும் பழ கண்காட்சி குழுக் கூட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு மலர் மற்றும் பழ கண்காட்சி குழுக் கூட்டம் நேற்று உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தோட்டக் கலைத்துறை இயக்குநர் மற்றும் குழுத் தலைவர் பிருந்தா தேவி, (இணையவழி மூலம்), நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் குழு உபதலைவர் சா.ப. அம்ரித், தலைமையில் நடைபெற்றது.
அதனடிப்படையில் இந்தாண்டு இம்மாவட்டத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 12வது காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் மே மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளிலும், 10-வது வாசனை திரவிய கண்காட்சி கூடலூரில் 12 முதல் 14-ம் தேதிகளிலும், 18-வது ரோஜா கண்காட்சி, அரசு ரோஜா பூங்காவில் மே மாதம் 13 முதல் 15ம் தேதி வரையிலும், 125-வது மலர் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும், 62-வது பழக் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாதம் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.