1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தானில் தொழுகையின் போது நேர்ந்த கொடூரம்! 46 பேர் உடல் சிதறி பலி..!!

பாகிஸ்தானில் தொழுகையின் போது நேர்ந்த கொடூரம்! 46 பேர் உடல் சிதறி பலி..!!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் புகழ்பெற்ற மசூதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து தொழுகை நடத்திச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் அந்த மசூதியில் தொழுகை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.


பாகிஸ்தானில் தொழுகையின் போது நேர்ந்த கொடூரம்! 46 பேர் உடல் சிதறி பலி..!!

அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்தவர் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தில் அந்த மசூதியின் ஒரு பகுதி அப்படியே இடிந்து அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இந்த கோர சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், ராணுவத்தினரும் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 46 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். படுகாயமடைந்த நிலையில் 150 பேர் மீட்கப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மசூதியில் தொழுகை நடத்தியவர்களில் முன் வரிசையில் இருந்த ஒருவர், திடீரென தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராணுவம் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தான் தலிபான்கள் என அழைக்கப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான்களே இந்த தாக்குதலை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு இந்த தீவிரவாதிகள் மிக நெருக்கமான கூட்டாளிகள் ஆவர். பாகிஸ்தானில் இஸ்லாமியச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை பாகிஸ்தான் ராணுவம் தேடி வருகிறது. இதனிடையே, இந்த வெடிகுண்டு தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like