1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4,411.68 கோடியில் பட்ஜெட் தாக்கல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4,411.68 கோடியில் பட்ஜெட் தாக்கல்..!!

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

அதில், 2022-23 நிதி ஆண்டில் திருப்பதி தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,385 கோடியே 25 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் 2023- 24 நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் வருமானம் ரூ.4,411 கோடியே 65 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,591 கோடியும், பல்வேறு வங்கிகளில் தேவஸ்தானம் வைப்பு நிதியாக வைத்திருக்கும் பணத்திற்கு கிடைக்கும் வட்டியாக ரூ.990 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.500 கோடியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.330 கோடியும், கட்டண சேவை, டிக்கெட் விற்பனை மூலம் ரூ.140 கோடி ரூபாயும், அறைகள் மற்றும் கல்யாண மண்டபங்களின் வாடகை வருவாய் மூலம் ரூ.129 கோடி ரூபாயும் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.4,411.68 கோடியில் பட்ஜெட் தாக்கல்..!!

இதே போல், ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.1,532 கோடி ரூபாயும், பொருட்களைக் கொள்முதல் செய்யும் வகையில் ரூ.690 கோடி ரூபாயும், முதலீட்டுச் செலவுகள் வகையில் ரூ.600 கோடியும், அபிவிருத்தி பணிகளுக்காக ரூ.300 கோடியும் முக்கிய செலவினங்களாக இருக்கும் என்று தேவஸ்தான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அலிபிரியில் இருந்து வகுளமாதா ஆலயத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கோடை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முக்கிய பிரமுகர்கள் பரிந்துரையின் மூலம் குறைக்கப்பட உள்ளது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை பக்தர்களின் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் குறைத்து இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

திருமலையில் உள்ள லட்டு கவுண்டர்களில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக 30 லட்டு கவுன்டர்கள் கட்ட ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம், உளுந்தூர்பேட்டையில் நன்கொடையாளரின் நன்கொடையில் கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ரூ.4.70 கோடியில் சில மேம்பாட்டுப் பணிகளை தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. திருப்பதி எஸ்.ஜி.எஸ். கலைக் கல்லூரியின் மேற்குப் பகுதியில் மூன்றாவது தளம் கட்டுதல், ஆய்வகங்களை நவீனப்படுத்துதல், நூலகம், உள்விளையாட்டுக் கட்டிடங்கள் கட்டுதல் போன்றவை ரூ.4.71 கோடிக்கு ஒப்பந்தம் அழைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்ரீநிவாசா மேன் பவர் கார்ப்பரேஷனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தரிசனம் மற்றும் சலுகை அடிப்படையில் மாதம் ரூ.20 வீதம் 10 லட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


Trending News

Latest News

You May Like