வெளியானது சூப்பர் அறிவிப்பு.. குழந்தைகளுக்கு ரூ.4000 நிதியுதவி.. உடனே அப்ளை பண்ணுங்க..!
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 'மிஷன் வாத்சல்யா' நிதி ஆதரவுத் திட்டத்தின் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள், சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், கணவரை இழந்த, விவாகரத்தான, பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பிலுள்ள குழந்தைகள், விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோரின் குழந்தைகள் போன்றோருக்கு இத்திட்டம் உதவுகிறது.
இதுமட்டுமல்லாமல், குழந்தைத் தொழிலாளர் அல்லது குழந்தைத் திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது இதர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கு ஏதுவாக நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு 'மிஷன் வாத்சல்யா' திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 01.04.2022 முதல் மாதம் ரூ.4000 வீதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிதி ஆதரவுத்தொகை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையினை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 24,000 ரூபாயில் இருந்து ரூ.72,000 (கிராமப்புற பகுதிகள்) ஆகவும், 36,000 ரூபாயில் இருந்து ரூ.96,000 (நகர் புறப்பகுதிகள்) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வருமான வரம்பிற்குட்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த மேற்கண்ட வகையிலான 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்கள் நிதி ஆதரவுத்தொகை பெறுவதற்கு 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2818, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் - 626003, தொலைபேசி எண்: 04562-293946' என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.