பெட்ரோல் குண்டு வீச்சு – 4 பேர் கைது!!
ஈரோட்டில் பாஜக இளைஞரணி நிர்வாகியின் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி இரவு ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் தட்சினாமூர்த்தி என்பவரது கடையில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ நிர்வாகி சதாம் உசேன் மற்றும் அவரது நண்பர்களான ஜாபர், ஆஷிக், கலீல் ரகுமான் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு விட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர். பொள்ளாச்சியில் 5 சம்பவங்களும், மேட்டுப்பாளையத்தில் இரண்டு சம்பவங்களும், புளியம்பட்டியில் ஒரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. அனைத்து வழக்குகளிலும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வழக்குகள் முடிவுக்கு வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 2000 போலீசாரும், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 1000 போலீசாரும் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் பாட்டிலில் பெட்ரோல் மற்றும் எரிபொருட்கள் வழங்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in