இன்று காலை நடந்த கோர விபத்து..!! அரசு பேருந்து - கார் மோதி குழந்தை, பெண்கள் உள்பட 4 பேர் பலி..!!
சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல முக்கிய சாலையாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல நகரங்களுக்கும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாகவே செல்லும் என்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த தேசிய நெடுஞ்சாலை காணப்படும்.
தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சாலை வழியாக பயணிக்கின்றனர். அதிவேகம், கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடைபெறுகின்றன. நேற்று காலை, திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பலியாகி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சலையில் கடலூர் திட்டக்குடி ஆவட்டி கூட்டுரோட்டில் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் மீது அரசுப்பேருந்து மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் அதிவேகத்தில் சென்று மோதியது. மரத்தின் மீது மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்து துடித்தனர்.
இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் பனியின் காரணமாக இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் தரப்பிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.