ஒரு சிறு கவனக்குறைவு 38 வயது நபரின் உயிரை காவு வாங்கியது..!!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). இவரது மனைவி பிரபா. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேந்திரன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தும்மக்குண்டுவில் உள்ள மாமனார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்றது. ஒரு வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்தவர், ஒரு கையில் பீடியைப் பிடித்துக்கொண்டே, இன்னொரு கையால் பெட்ரோலை ஊற்றினார்.
அப்போது, பீடியில் இருந்து தீப்பொறி பறந்து பெட்ரோலில் விழுந்தது. இதில் நொடிப்பொழுதில் தீப்பற்றியது. இதில் ராஜேந்திரன் மீது தீப்பற்றி அலறித் துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். பின்பு ராஜேந்திரன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருசநாடு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீடியை பிடித்துக்கொண்டே பெட்ரோல் போட்ட வாலிபர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.