தோழியின் நிச்சயதார்த்த விழாவில் 38 சவரன் நகை திருடிய பெண்!!
தோழியின் நிச்சயதார்த்த விழவில் 38 பவுன் நகையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவினர்கள் மற்றும் தோழிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 38 பவுன் நகைகள் மாயமானதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் முகமது ஆரிப் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உறவினர்கள் மற்றும் மணப்பெண்ணின் தோழிகளிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த வினிதா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் நகையை திருடி விற்றதை ஒப்புக்கொண்டார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணும், வினிதாவும் மன்னார் குடியில் ஒன்றாக கல்லூரி படிக்கும் போது தோழிகளாக இருந்துள்ளனர்.
பிறகு படிப்பு முடித்து விட்டு வினிதா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து தோழியின் திருமண நிச்சயத்திற்கு வந்திருந்த போது அவருடனே வினிதா தங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு நகைகள் அனைத்தையும் கழட்டி வீட்டில் இருந்த பீரோவில் வைத்துள்ளார்.
இதைப்பார்த்த வினிதா நகைகளைத் திருடிக் கொண்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார். பாதி நகையை விற்று புதிய நகை ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் ஊருக்கு வந்த அவர் மீதி நகையையும் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in