கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சி: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது..!

கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சி: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது..!
X

மதுரையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் உதவியுடன் கூலிப்படையால் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பாலை பி.வி.கே.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர், மஸ்கட் நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வைஷ்ணவி (25). செந்தில்குமார், வருடத்திற்கு இரண்டு முறை குடும்பத்தை பார்க்க ஊருக்கு வந்து செல்வார்.


அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் மதுரை வந்தபோது செந்தில்குமாருக்கும், அவரது அண்ணன் நவநீதகிருஷ்ணனுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி காலை குழந்தையை பள்ளியில் விட்டு இருசக்கர வாகனத்தில் செந்தில்குமார் வீடு திரும்பினார். பொன்விழா நகர் பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். செந்தில்குமாரின் அலறலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர, கொல்ல முயன்ற இருவரும் தப்பிச் சென்றனர்.

செந்தில்குமார் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரிததபோது, சொத்து பிரச்னை காரணமாக தன் அண்ணன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். தல்லாகுளம், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமார் மனைவி வைஷ்ணவிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் அவரிடம் விசாரித்தபோது, அவர் தன் மாமா மகனான சிவகங்கை மேலவாணியன்குடி வெங்கடேசன் (25) என்பவருடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, வைஷ்ணவி, வெங்கடேசன், கூலிப்படையாக செயல்பட்ட சிவகங்கை ஓட்டகுளம் சாந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது; 'பூக்கடை நடத்தி வருபவர் வெங்கடேசன். இவரது அத்தை மகள் வைஷ்ணவி. இருவரும் காதலர்கள். பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் செந்தில்குமாருடன் வைஷ்ணவிக்கு திருமணம் நடந்தது. அவர் வெளிநாட்டில் பணிபுரிந்ததால் வெங்கடேசனுடனான தொடர்பை வைஷ்ணவி தொடர்ந்துள்ளார்.

கடந்த செப்டம்பரில் ஊர் திரும்பிய செந்தில்குமார், "இனி, வெளிநாட்டிற்கு செல்ல போவதில்லை" எனக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியும், வெங்கடேசனும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் எனக்கருதி, கூலிப்படையால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்' என்று அவர்கள் கூறினர்.

Next Story
Share it