தொடர் மழை எதிரொலி : 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கனமழை தொடரும் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 1 திங்கள் வரை கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும். கடந்த ஐந்து நாட்களாக மாநிலத்தில் பல இடங்களில் மழை பதிவாகி வருகிறது. மழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, வானிலை மையம் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடுக்கியில் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மே 2-ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.