தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!! தொடர்ந்து 3 மாதம் ராகிங்... மருத்துவ மாணவி தற்கொலை... சக மாணவர் கைது!!
தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் காக்கத்தீயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில், ப்ரீத்தி என்ற மாணவி முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் ஆசிப் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆசிப் தன்னை ராகிங் செய்வதாக ப்ரீத்தி பெற்றோரிடம் பலமுறை புகார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ப்ரீத்தியின் பெற்றோர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இரண்டு பேரையும் வரவழைத்து கவுன்சிலிங் செய்த கல்லூரி நிர்வாகம் பின்னர் இரண்டு பேரையும் அனுப்பி வைத்துவிட்டது.
மேலும் ப்ரீத்தி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிப்பை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிப், தான் ப்ரீத்தியை ராகிங் செய்யவில்லை. பணி தொடர்பாக அவரை சில விஷயங்களில் கண்டித்தேன் என்று கூறியிருக்கிறார். எனவே அவருக்கு கவுன்சிலிங் செய்த போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் ப்ரீத்தி, அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை மயக்கமடையச் செய்யும் அனஸ்தீசியாவை அதிகளவில் தன்னுடைய உடலில் ஊசி மூலம் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கவனித்த சக மாணவிகள் அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வராங்கல் போலீசார் முதுநிலை மருத்துவ மாணவர் ஆசிப்பை பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாணவியை ராகிங் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய உடல் மீண்டும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை வேன்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது பற்றி அறிந்த அரசு அதிகாரிகள் ப்ரித்தீ குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ப்ரீத்தி மரணத்திற்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இது தவிர ப்ரீத்தி மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ப்ரித்தீ குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டனர். எனவே ப்ரீத்தி உடல் உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.