என்னப்பா சொல்றீங்க..!! லாட்டரியில் 25 கோடி வென்றதால் நிம்மதி இழந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை...!!
ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு இந்த ஆண்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்திருந்தது. ஒரு லாட்டரி சீட்டு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் லாட்டரி குலுக்கல் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் நடந்தது. அதில், டிஜே 750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது.
அந்த லாட்டரி சீட்டை திருவனந்தபுரம், ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் (44) என்பவர் வாங்கி இருந்தார். இந்த பரிசுத்தொகையால் ஒரே நாளில் நாடு முழுவதும் ஆட்டோ டிரைவர் அனுப் பிரபலமாகிவிட்டார். பரிசுத்தொகை கிடைத்து 5 நாட்களே ஆகியுள்ள நிலையில், தற்போது வருத்தத்தில் இருப்பதாக அனுப் புலம்பியுள்ளார்.
"இப்போது நான் இந்த லாட்டரியில் ஏன் வென்றேன் என நினைக்கிறேன். மற்றவர்களை போலவே நானும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விளம்பரங்கள் கிடைத்ததால், வெற்றி பெறுவதை மிகவும் ரசித்தேன். ஆனால் இப்போது இது ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது. எனக்கு இப்போது வெளியே செல்லக்கூட முடியவில்லை. என்னிடமிருந்து உதவி கேட்டு மக்கள் என்னைப் தொல்லை செய்கின்றனர்" என்று கூறினார்.
அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இன்னும் பணம் என் கைக்கு வரவில்லை என்று பதிவிட்டுள்ளார். "பணத்தை என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் இரண்டு வருடங்கள் பணத்தையும் வங்கியில் வைக்கும் எண்ணம் உள்ளது. இப்போது எனக்கு ஏன் இவ்வளவு பரசு கிடைத்தது என வருந்துகிறேன். இதற்குப் பதிலாக, குறைந்த பரிசுத் தொகையாக இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்," என்று கூறினார்.
தனக்குத் தெரிந்த பலர் எதிரிகளாக மாறும் நிலை இப்போது வந்துவிட்டது என்று அனூப் கூறுகிறார். "என்னைத் தேடி பலர் வருகிறார்கள். முகமூடி அணிந்தாலும், எனக்கு லாட்டரி பரிசு கிடைத்துள்ளது என்று தெரிந்தும் எல்லோரும் என்னைச் சுற்றி வருகிறார்கள். என் மன அமைதி எல்லாம் காணாமல் போய்விட்டது" என்று அனூப் புலம்பினார்.