அண்ணன் தலையை வெட்டி 20 துண்டுகள் போட்ட தங்கச்சி.. 8 ஆண்டுகளுக்கு பின் போலீஸிடம் சிக்கினர்..!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவை சேர்ந்தவர் சிவபுத்ரா. அதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ. இவர்கள் 2 பேரும் பெங்களூரு ஜிகனி பகுதியில் தங்கி தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும், பாக்கியஸ்ரீயின் சகோதரர் லிங்கராஜ் பூஜாரி, ஜிகனிக்கு வந்தார்.
அவர் தனது சகோதரியிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தனது காதலை கைவிட, அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாக்கியஸ்ரீ, தனது காதலன் சிவபுத்ரா உதவியுடன் லிங்கராஜ் பூஜாரியை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த லிங்கராஜ் பூஜாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும், போலீசாரிடம் சிக்காமல் இருக்க லிங்கராஜ் பூஜாரியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசினர். பின்னர் அவர்கள் தலைமறைவானார்கள். இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபுத்ராவையும், பாக்கியஸ்ரீயையும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர்களை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில், சிவபுத்ராவும், பாக்கியஸ்ரீயும் மராட்டிய மாநிலம் நாசிக்கில் பதுங்கி இருப்பதாக ஜிகினி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சென்று அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையல், காதலை கைவிட வலியுறுத்தியதால் சகோதரர் என்று கூட பாராமல், காதலனுடன் சேர்ந்து லிங்கராஜ் பூஜாரியை பாக்கியஸ்ரீ கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காதல் ஜோடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.