மதுரை டூ கோவை: 2 மணி, 47 நிமிடத்தில் வந்த இதயம்..!
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கு பொருத்துவதற்காக, மதுரையில் இருந்து கோவைக்கு, 2 மணி 47 நிமிடங்களில் இதயம் கொண்டு வரப்பட்டது.
மதுரையில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த ஒரு ஆணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய திட்டமிடப்பட்டது. இதையடுத்து, அவருடைய இதயம் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கால, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் இருந்து கோவைக்கு, 2 மணி 47 நிமிடத்தில் அந்த இதயம் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு கூறுகையில், "'மதுரையில் இருந்து கோவைக்கு ஆம்புலன்சில் இதயம் எடுத்து வர தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்கு முன்னரே தெரியப்படுத்தினோம். நேற்று மதியம் 1 மணிக்கு மதுரையில் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் கோவை மாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து, இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது" என்றார்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறுகையில், "ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாக திருப்பூர், அவிநாசி, பொள்ளாச்சி, உடுமலை, செட்டிபாளையம், மாணிக்காபுரம் ரோடுகளில் போக்குவரத்தை மாற்றி அமைத்தோம். பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, இந்த ஆம்புலன்ஸ் பயணம் மிகப்பெரும் சவாலாக இருந்தது" என்றார்.