அதிர்ச்சி..!! உயிரை காப்பாற்ற வேண்டிய ஆக்ஸிஜன் சிலிண்டர் 2 பேரின் உயிரை காவு வாங்கியது..!!
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் தயாள் மருத்துவனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின.
இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, உள்ளூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முகல்சராய் எம்எல்ஏ வந்தனர். இதையடுத்து வெடிவிபத்து காரணமாக சாலையில் கிடந்த சடலங்களை போலீசார் கைப்பற்றினர். போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வெடி விபத்தில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் சாலையில் கிடப்பது போன்றும், மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் லாரி ஒன்று நின்றிருந்ததும் தெரியவந்தது.
இந்த லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கி கொண்டிருந்தபோதுதான் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.