பல்கலைக் கழகத்தில் ராகிங் தொல்லை: 2வது மாடியில் இருந்து குதித்த மாணவர்..!
ராகிங் தொல்லையால், பல்கலைக் கழக விடுதி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் திப்ரூகார் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்ரூகார் பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றி ஆனந்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதில், 5 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களில், நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவரின் நிலை சிகிச்சைக்கு பின்னர் தேறி வருகிறது. தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.