1. Home
  2. சினிமா

பிச்சைக்காரன் - 2 படத்தை தள்ளிவைத்ததால் பொருளாதார நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது..!!

பிச்சைக்காரன் - 2 படத்தை தள்ளிவைத்ததால் பொருளாதார நஷ்டமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது..!!

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

படம் வெளியாவதை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், படத்தை வெளியிடுவது தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி வேதனை தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன்-2 படத்தின் கதை கரு பொதுவெளியில் உள்ளதோடு, இதே கதை கருவோடு 1944ம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில், பல படங்கள் வெளியாகி உள்ளதால், இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கொண்டாட முடியாது எனவும் விஜய் ஆண்டனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறபட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிபதி எஸ்.சௌந்தரிடம் முறையிடப்பட்டபோது, இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like

News Hub