சிறுவனின் சிறு தவறினால் நேருக்கு நேர் மோதி கொண்ட 2 லாரிகள்..!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் கம்பத்தில் மோதி கோவை நோக்கி வந்த மற்றொரு லாரி மீது மோதி கீழே சாய்ந்தது.
இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது ஏற்பட்ட இந்த விபத்தில். ஹாலோ பிளாக் கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கற்கள் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பொது மக்கள் உதவியுடன் சரி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் பிரவீன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.