இந்தியாவில் காவல்துறை பணியில் சேர்ந்த 2வது திருநங்கை ராஜினாமா..!!

இந்தியாவில் காவல்துறை பணியில் சேர்ந்த 2வது திருநங்கை ராஜினாமா..!!
X

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை நஸ்ரியா( 25). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்த இவர், தற்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண் கடத்தல் தடுப்பு பிரிவில் கான்ஸ்டபிள் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் இந்தியாவில் காவல்துறை பணியில் சேர்ந்த 2வது திருநங்கை ஆவார். இந்நிலையில் இன்று இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து ராஜினமா கடிதத்தை அளித்தார்.

கோவை போலீஸ் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வரும் தன்னை, உயர் அதிகாரிகள் பணி செய்து விடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள் என்றும், தான் சார்ந்த பிரிவில் உயரதிகாரியாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர், ஒரு ஆண் டிஎஸ்பி மற்றும் ரைட்டர் தன்னை தொந்தரவு செய்வதாகவும் கூறினார்.இன்ஸ்பெக்டரின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த ஜனவரி மாதம் 18 தூக்கு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் அருகில் இருந்தவர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பிறகும் என் மீதான தொந்தரவு தொடர்வதாகவும், ஆகையால் கண்ணியம் இல்லாத இந்தத் துறையில் வேலை செய்ய நான் விரும்பவில்லை என்றும் கூறிய நஸ்ரியா, டிஎஸ்பி அலுவலகத்திற்கும், டிஜிபி அலுவலகத்திற்கும் இருமுறை புகார்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மன அழுத்தம் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டேன் என்றும், தனது சீருடையை போலீஸ் ஸ்டோர் பிரிவில் ஒப்படைத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், “நஸ்ரியாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே ஒழுங்கின நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய புகார் தொடர்பாக வடக்கு பகுதி துணை கமிஷனர் சதீஷ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பின்னர் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ராஜினாமா கடிதம் ஏற்பது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.

Next Story
Share it