ஜீவனாம்சம் விவகாரம்.. கூலிப்படையை ஏவி 2வது மனைவி கொலை.. உளவுப் பிரிவு அதிகாரி கைது..!
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் விஜால்பூர் ஸ்ரீநந்தநகர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி பெண்ணின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மணீஷா தூதெல்லா (47) என்பது தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இதில், கலீலுதீன் சையது என்ற தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், மணீஷாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விசாரித்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கொலையை செய்யும்படி மணீஷாவின் முன்னாள் கணவரான ராதாகிருஷ்ண மதூக்கர் தூதெல்லா சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது.
2015-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து மதூக்கர் பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து பிளாட்டில் தனியாக வசித்த மணீஷாவை தீர்த்து கட்ட, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உள்ளார் மதூக்கர். அவர்களிடம் ரூ.1.5 லட்சம் பேரம் பேசியுள்ளார். இதன்பின்பு அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த மணீஷாவை கொலை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் மதூக்கரை நேற்று கைது செய்தனர். போலீசில் அவர் செய்த விவரங்களை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 3 திருமணங்களை செய்துள்ள மதூக்கருக்கு மணீஷா 2-வது மனைவியாவார். பிரிந்து வாழும் 2-வது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளார் மதூக்கர். ஜீவனாம்சம் கொடுக்காமல் இருப்பதற்காக இந்த கொலையை செய்திருக்க கூடும் என மதூக்கர் மீது போலீசார் சந்தேகிக்கின்றனர்.