என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை - செந்தில் பாலாஜி..!

சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதரபாத் ஆகிய பகுதிகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை தொடர்கிறது. இதனிடையே கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த சென்ற போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிகாரிகளின் வாகனங்களை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சோதனைக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் தனது அறைக்குச் சென்ற செந்தில் பாலாஜி, துறை ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் மட்டுமே சோதனை நடக்கிறது” என்றார்.

எனக்கு வந்த தகவல்கபடி 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக்கூடாது. முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளேன். எனது தம்பி வீட்டில் சுவர் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். சுவரில் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்ட வீடியோ எனக்கு வந்துள்ளது. அதனை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும்.
எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் ஒத்துழைப்பு தர தயார்.சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை சோதனை முழுவதும் நடைபெற்று முடிந்தவுடன் மீண்டும் எனது கருத்துகளை பதிவு செய்கிறேன். 2006க்கு பிறகு என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொத்துக்கள் வாங்கவில்லை. எனது தம்பி மனைவியின் தயார் அவரது மகளுக்கு கொடுத்த இடத்தில்தால் எனது தம்பி வீடு கட்டுகிறார். அதில் என்ன தவறு ? நேர்மையாக இருக்கிறோம். எந்த சோதனையையும் விசாரணையையும் எதிர்கொள்ள நானும் என்னை சார்ந்தவர்களும் தயார். ” எனக் கூறினார்.