அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டுவரை அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, அவர் அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை, கோவை, கரூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது தி.மு.க-வினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
newstm.in