நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..! கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ. 1,880 அதிகரிப்பு..!!

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரண்டு வங்கிகள் திவாலானதால் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை 1,880 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,415-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.4,407-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.