பிரபல பின்னணி பாடகி பமீலா சோப்ரா காலமானார்..!!

பாடகி, எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் பமீலா சோப்ரா. 1970-ல் இயக்குநர் யாஷ் சோப்ராவை திருமணம் செய்து கொண்ட பமீலா, அதன்பின் அவரது படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
கபி கபி, நூரி, காலா பத்தர், சில்சிலா, சாந்தினி, தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே மற்றும் முஜ்சே தோஸ்தி கரோகே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். 1976-ல் இயக்குநர் யாஷ் சோப்ரா இயக்கத்தில் வெளியான ‘கபி கபி’ படத்தின் கதையை எழுதினார். அதனைத் தொடர்ந்து, 1997-ல் வெளியான ‘தில் தோ பாகல் ஹை’ படத்திற்கு திரைகதையை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், பமீலா சோப்ரா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். “ஏஆர்டிஎஸ் (அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்ட்ரோம்) கொண்ட நிமோனியா காரணமாக அவர் இன்று காலை காலமானார். ஐசியுவில் 15 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்” என்று மருத்துவர் பிரஹலாத் பிரபுதேசாய் பிடிஐயிடம் தெரிவித்தார்.

பமீலா சோப்ராவின் மரணத்தை உறுதிப்படுத்தும் அறிக்கையை YRF பகிர்ந்துள்ளது. அதில், “கனத்த இதயத்துடன், சோப்ரா குடும்பத்தினர் 74 வயதான பமீலா சோப்ரா இன்று காலை காலமானார் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். உங்கள் பிரார்த்தனைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், குடும்பத்தினர் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

இவரது மறைவுக்கு மூத்த பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகர்கள் அனுபம் கெர், சஞ்சய் தத், அஜய் தேவகன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.