1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்.. கேபிள் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!

பெரும் சோகம்.. கேபிள் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!

மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது என்று, குஜராத் தகவல் தொடர்புத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் சமீபத்தில் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

பெரும் சோகம்.. கேபிள் பாலம் விபத்து.. பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு..!

சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து விழுந்ததில், பாலத்தில் நின்றுகொண்டிருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது.


மீட்பு பணியை துரிதப்படுத்த, இன்று அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்றடைந்தது என்று, குஜராத் தகவல் தொடர்புத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, "உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், "உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்; காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்" என்று, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like