பொங்கல் பரிசு 1,000 ரூபாயை ஏன் வங்கி கணக்கில் செலுத்தக்கூடாது..?உயர்நீதிமன்றம் கேள்வி..!!
பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் இன்று(ஜன. 3) முதல் 8-ம் வரை நடைபெறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9-ம் தேதியில் தொடங்கி வைக்க உள்ளார். அதே தேதியில் மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், “பொங்கலை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குள்ள ரூ. 1,000 பணத்தை ஏன் பயனாளிகளின் வங்கி கணக்கில் அல்லது மணியார்டரில் செலுத்த கூடாது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்ததை போல், ரேசன் கார்டில் வங்கி கணக்கையும் இணைக்கலாம்” என கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.