இந்த வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா ?இன்று முதல் 10 ரூபாய் அபராதம் ..!
ஏடிஎம்கள் எளிதாக எங்கிருந்தும் உடனடியாக பணம் எடுப்பதற்கு தேவையான இயந்திரங்களாக இருக்கின்றன. வங்கி கணக்கில் பணம் இருக்கும்போது ஏடிஎம்மில் வழக்கம் போல பணம் வந்துவிடும். எனினும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்தால் பரிவர்த்தனை தோல்வி அடைந்துவிடும். இதுபோல பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் முறை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அறிமுகமாகியுள்ளது.
இந்நிலையில், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் இன்று 2023 மே 1ஆம் தேதி முதல் 10 ரூபாய் அபராதமும், அதற்கு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஏடிஎம் டெபிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகளுக்கு விநியோக கட்டணம் மற்றும் ஆண்டு பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி அமல்படுத்தும் பணிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோக, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் ஸ்வைப்பிங் மெஷின்களில் (PoS) பணம் செலுத்த முயன்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்த முயன்றாலும் அதற்கு அபராதம் விதிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுள்ளது.