கலப்பு திருமணம் செய்தால் ரூ.10 லட்சம்!!
கலப்பு திருமணம் செய்து கொண்டால் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டில் கலப்பு திருணம் குறித்த நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, கலப்பு மணம் செய்பவர்களுக்கு நிதியுதவி 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் கலப்பு திருமணம் புரிபவர்களுக்கு டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்பு மணத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
5 லட்ச ரூபாய் எட்டு ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகையாகவும், மீதமுள்ள 5 லட்ச ரூபாய் புதுமணத்தம்பதிகளுக்கு கூட்டு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
75 சதவீத நிதியை மாநில அரசும், 25 சதவீத நிதியை மத்திய அரசும் வழங்குகிறது. 2006இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் முதலில் 50 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
newstm.in