பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. மெட்ரோ சொன்ன குட் நியூஸ்..!

பயணிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. மெட்ரோ சொன்ன குட் நியூஸ்..!
X

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.


அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 20-ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் முதலாவதாக, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (ரூ.2,500- மற்றும் ரூ.50- வைப்புத்தொகை மதிப்பு) வழங்கப்படவுள்ளது.

இரண்டாவதாக, மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு 1500 ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.


மூன்றாவதாக, மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான 500 ரூபாய்க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா 1,450 ரூபாய் மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கும் மார்க் மெட்ரோ சார்பாக பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட திட்டங்கள், பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் அடுத்த மாதமும் தொடரும்.

அடுத்த மாதத்திற்கான குலுக்கல் (21.11.2022 - 20.12.2022) 2022 டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it