இந்த படத்திற்கான ஆதாரம் காட்டினால் ரூ.1 கோடி பரிசு!!
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாக ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது.
மதவாதம் இல்லாத கேரளாவில் இது போல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாக பலரும் இந்த படத்தின் ட்ரைலருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. சங் பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது போல், உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என கேரள மாநில முஸ்லீம் யூத் லீக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முஸ்லீம் யூத் லீக்கின் பொது செயலாளர் பி.கே.பிரோஸ், 32000 பேரை இடம் மாற்றம் செய்ததாக கூறினால், சராசரியாக ஒரு பஞ்சாயத்துல 30 பேராவது இருப்பார்கள்.
ஆனால் ஒருவரின் முகவரி கேட்டால், தலை குனிந்து உட்கார்ந்து கொள்வீர்கள். ஆகையால் ஆதாரத்தை கொண்டு வருபவர்களுக்கு முஸ்லிம் யூத் லீக் ஒரு கோடி பரிசு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in